மன்றத்துறை:-
மன்றத்துறை, மன்றச் செயலாளரின் கீழ் இயங்கி வருகிறது. மன்றம், மாநகரத் தந்தை மற்றும் பல்வேறு நிலைக்குழுக்களுக்கு இத்துறை தலைமைச் செயலகமாக செயல்பட்டு வருகின்றது. மாநகரத் தந்தை சிறந்த முறையில் பணியாற்றவும், மன்றம் மற்றும் குழுக்கள் சிறந்த முறையில் செயல்படவும் இத்துறை உதவுகிறது.
பொதுத்துறை:-
பணியாளர் மற்றும் பொது நிர்வாகம் ஆகியவகைகள் இத்துறையைச் சார்ந்தவைகளாகும். அனைத்து பணிநியமனங்கள், பதவி உயர்வு, பயிற்சி, ஒய்வு, ஒய்வு ஊதிய பயன்கள், பணியாளர் ஒழுங்கு நடவடிக்கை போன்றவைகள் இத்துறையின் உதவி ஆணையரின் கீழ் தலைமையகத்தில் செயல்பட்டு வருகிறது.
நிதி நிர்வாகப்பிரிவு:-
இத்துறை நிதி ஆலோசகரின் கீழ் செயல்பட்டு வருகிறது இந்த அலுவலர், அரசு தலைமைச் செயலகத்தின் நிதி துறையிலிருந்து பெருநகர சென்னை மாநகராட்சி க்கு பணிவிடைமாற்றத்தில் நியமனத்தில் நியமனம் ஆனவர். மாநகராட்சியின் வரவு, செலவு திட்டம் தயாரித்தல், கடன் மற்றும் மானியங்கள் அரசிடமிருந்து பெறுதல். வரவு செலவினை கண்காணித்தல் ஆகியவை இத்துறையின் பொறுப்புக்கள் ஆகும்.
நிலம் மற்றும் உடைமைத்துறை :-
மாவட்ட வருவாய் அலுவலரின் கீழ் இத்துறை இயங்கி வருகிறது. மாநகராட்சி நிலங்கள், கட்டிடங்கள் ஆகியவைகளை குத்தகை விடுவது மற்றும் வணிக வளாகங்களின் வாடகை வசூலித்தல் ஆகியவைகள் இத்துறையைச் சார்ந்த பணிகளாகும்.
வருவாய்த்துறை:-
வருவாய் அலுவலர் இத்துறைக்கு தலைவராவார். சொத்து வரி, தொழில் வரி, விளம்பர வரி, நிறுத்தக் கட்டணங்கள் மற்றும் ஏனைய வரிகள் வசூலிப்பது இவரின் பொறுப்பாகும். சொத்து உரிமையாளர் பெயர் மாற்றம், சொத்து வரி மாற்றம், ஏனைய வரிகளின் வசூல் மற்றும் சொத்து வரிவிதித்தல் போன்றவை இத்துறையின் பணிகளாகும்.
பொறியியல் துறைகள்:-
பணித்துறை:-
நகரப் பொறியாளர் இத்துறைக்குத் தலைவர். குடியிருப்பு மற்றும் தொழிற் கூடங்களின் கட்டிடங்கள் முதல்மாடி வரை கட்டுவதற்கான கட்டட அனுமதி வழங்குதல் இத்துறையின் பணிகளாகும். தனியார் தெருக்கள் மற்றும் மத்திய தார்நிலையம் ஆகியவைகளின் பராமரிப்பும் இத்துறையைச் சார்ந்ததாகும்.
இயந்திரப் பொறியியல் துறை:-
கண்காணிப்பு பொறியாளர் (இயந்திரம்) இத்துறையின் தலைவராவார். பெருநகர சென்னை மாநகராட்சி யின் அனைத்து வாகனங்கள் வாங்குதல் மற்றும் மத்திய தார்நிலையம் ஆகியவைகளின் பராமரிப்பும் இத்துறையைச் சார்ந்ததாகும்.
கண்காணிப்பு பொறியாளர் (இயந்திரம்) இத்துறையின் தலைவராவார். பெருநகர சென்னை மாநகராட்சி யின் அனைத்து வாகனங்கள் வாங்குதல் மற்றும் பராமரிப்புக்க இவர் பொறுப்பாவார். வாகனங்களின் கட்டுமாணப்பணி மற்றும் பழுது பார்த்தல், பள்ளிக்கு தேவையான தளவாடங்கள் வாங்குதல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகள் இத்துறையால் மேற்கொள்ளப் படுகின்றன. மாநகராட்சி அச்சகம், பொதுப் பணிமனை ஆகியவைகள் இத்துறையின் கீழ் இயங்கி வருகின்றன.
மின்சாரத்துறை:-
கண்காணிப்பு பொறியாளர் (மின்சாரம்) இத்துறையின் தலைவர். தெரு விளக்குகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல் மின் வடக்கம்பிகள் அமைத்தல். மின்சாரச் சுடுகாடு பராமரிப்பு ஆகியவைகள் இத்துறையின் பணிகளாகும்.
திடக்கழிவு மேலாண்மைத்துறை:-
கண்காணிப்பு பொறியாளர் ஒருவர் இத்துறையின் தலைவர். சென்னை மாநகர எல்லைக்குள் உள்ள குப்பைகளை நாள்தோறும் அகற்றும் பணி இத்துறையைச் சார்ந்ததாகும். ஒவ்வொரு நாளும் 3200 டன் குப்பைகள் அகற்றப்படுகின்றன. முக்கிய சாலைகள், வணிக வளாகங்களில் இரவு நேரம் துப்புரவுப் பணிகளும் நடைபெறுகின்றன.
கட்டடத்துறை:-
இத்துறை ஒரு கண்காணிப்பு பொறியாளரின் கீழ் இயங்கி வருகிறது. பள்ளிக்கட்டிடங்கள், பொதுக் கழிப்பிடங்கள், சமுதாயக் கூடங்கள், வணிகவளாகங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவைகளை கட்டும் பணிகளை இத்துறை மேற்கொண்டுள்ளது.
மழைநீர் வடிகால்த்துறை:-
கண்காணிப்பு பொறியாளர் ஒருவரின் கீழ் செயல்பட்டு வரும் இத்துறை மழைநீர் வடிகால்கள் கட்டுதல், பராமரித்தல், மழைநீர் வடிகால் சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளது.
பாலங்கள் துறை:-
இத்துறை ஒரு கண்காணிப்பு பொறியாளரின் கீழ் இயங்கி வருகிறது. பாலங்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் போன்றவைகளை கட்டும் பணி மற்றும் பராமரித்தல் பணிகள் இத்துறையால் மேற்கொள்ளப்படுகிறது.
சுகாதாரத்துறை:-
இத்துறை சுகாதார அலுவலரின் கீழ் இயங்கி வருகிறது. மருந்தகங்கள், பொதுச்சுகாதாரம், உணவுக் கலப்பட தடுப்பு, பிறப்பு இறப்புச் சான்றிதழ் வழங்குதல் போன்ற பணிகளை இத்துறை மேற்கொண்டு வருகிறது.
குடும்ப நலத்துறை:-
இத்துறை மருத்துவ அலுவலரின் கீழ் இயங்கி வருகிறது. இத்துறையானது மகப்பேறு , குழந்தைகள் நல மையம், குடும்பநலத்துறை மற்றும் சொட்டு மருந்து நிகழ்ச்சிகள்.
கல்வித்துறை:-
இத்துறை கல்வி அலுவலரின் கீழ் இயங்கி வருகிறது. இத்துறையானது சிறுபாலர் பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளிகள், சமுதாயக் கல்லூரிகள் மற்றும் உணவகங்கள் நிர்வகித்து வருகின்றது.
பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல்கள்:-
இத்துறை கட்டுப்பாட்டு அலுவலரின் கீழ் இயங்கி வருகிறது. பூங்கா, விளையாட்டுத் திடல்கள் மற்றும் நீச்சல் குளத்தின் பராமரிப்புப் பணியினையும் மேற்கொண்டு வருகிறது.