முகப்பு>>சென்னையைப்பற்றி

சென்னையைப்பற்றி

            தொண்டை மண்டலக் கடற்பகுதியைச் சார்ந்து இருந்த மயிலாப்பூருக்குத் தெற்கே 17ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் இருந்து வாணிகம் செய்து கொண்டிருந்தார்கள். வடக்கே சற்றுத் தொலைவில் மக்கள் வாழ்ந்திருந்தார்கள்.  இடையே நீர்ப்பகுதி இருந்தது.  நீர்ப் பகுதியை ஒட்டிய கடல்சார்ந்த மணல் வெளியில் தேவையான அளவு மணல்வெளி நிலப்பரப்பு ஃபிரன்ஸிஸ்டே என்பவன் கண்ணில்பட்டது.  இடைப்பட்ட ஓரிடத்தில் செல்வாக்கான மீனவன் மதுரசேனன் என்பவன் தோட்டம் வைத்திருந்தான்.  பழங்காலத்தில் கோயிலுக்கு இடம் தேர்வு செய்வதில் ஒரு முறை உண்டு, கோயில் கட்டத் தேர்ந்தெடுக்கும் இடத்தில் பயிர் விதைத்து நன்றாக வளருகிறதா என்று பார்ப்பார்கள். அப்படி வளருகிற இடம்தான் நல்ல இடமாகத் தேர்வு செய்யப்படும்.  தோட்டம் முதலியன வைத்து வாழ்ந்த மதுரசேனன் செல்வாக்கினால் அந்தப் பகுதி, "மதுரசேனன் பட்டினமாக' வழங்கப்பட்டிருக்கிறது.  அந்த செழிப்பான இடத்தை உள்ளிட்ட மணல் வெளியைச் சந்திர கிரி ஆளுகையிடமிருந்து பெற்றுத்தான் ஃபிரான்ஸிஸ் டே ஆங்கிலேயக் கம்பெனிக்குக் கோட்டை கட்டிக் கொள்ள அடித்தளமிடுகிறான்.

            கோல்கொண்டா சுல்தான் மீர் ஜமலா தலைமையில் இருந்த படை கீழைக் கடற்கரையில் பழவேற்காடு வரை கைப்பற்றியிருந்தது.  கோல்கொண்டா சுல்தானுடன் தொடர்பு வைத்திருந்த டச்சுக்காரர்கள் வணிக நிலையங்களை ஆங்காங்கு நிறுவி வந்தனர். டச்சுக்காரர்கள் 1610-ல் வேங்கடன் என்ற அரசனிடமிருந்து பழவேற்காட்டில் வாணிகம் தொடங்க  உரிமை பெற்றிருந்தனர்.

            சாந்தோமிலிருந்து போர்ச்சுக்கீசியர்கள் வாணிபம் செய்து வந்தனர்.  அவர்கள் பழவேற்காட்டைத் தாக்கக்கூடும் என்று எண்ணி வேங்கடனின் மனைவி ஒரு கோட்டையைப் பழவேற்காட்டில் கட்டிக்கொண்டிருந்தாள். அதை டச்சுக்காரர்கள் தங்களுடைய செலவில் விரைந்து கட்டித்தந்தனர்.  வேங்கடன் இறந்தபிறகு விசயநகரப் பேரரசில் ஏற்பட்ட குழப்பத்தால் டச்சுக்காரர்கள் நல்ல பாதுகாப்புடன் பழவேற்காட்டுக் கோட்டையில் இருந்து கொண்டு வாணிகம் செய்தனர்.

            இதனால் 1611-ல் ஆங்கிலேயர்கள் பழவேற்காட்டில் நுழைய முடியாமல் போனது. நிஜாம், மசூலிப்பட்டினங்களில் வணிகத்தைத் தொடங்கிவிட்ட ஆங்கிலேயர்கள் 1621-ல் டச்சுக்காரர்களுடன் உடன்படிக்கைச் செய்துகொண்டு பழவேற்காட்டின் வடக்குப்பகுதியில் இருந்த ஆர்மகான் (ஆறுமுக முதலியின் இடமான ஆறுமுகப் பட்டினம்) இடத்தில் இருந்து வணிகம் செய்யத் தொடங்கினர்.

            ஆறுமுகப் பட்டினத்தில் இருந்த துணைப் பண்டகச் சாலையின் தலைவராகப் பணியாற்றியவர் பிரான்சிஸ்-டே. அவர் நெசவுப் பொருள் மலிவாகக் கிடைக்கும் இடத்தை அறிவதற்காகத் தெற்கு நோக்கி வந்தார். அக்காலத்தில் மயிலாப்பூர் சார்ந்த பகுதிகளில் மலிவாக (துணிகள்) கிடைப்பதை அறிந்து மேலதிகாரிகளுக்குக் கூறினார்.  இடையில் சாந்தோமில் இருந்த ஒரு பெண் மீது காதல் வயப்பட்டுள்ளார்.  அவளை அடிக்கடி சந்திப்பதற்காகவும்,  மயிலாப்பூர் சார்ந்த பகுதியைத் தேர்ந்தெடுத்தான் என்பர்.  அதற்காகப், பூவிருந்தவல்லியிலிருந்து தொண்டை நாட்டை ஆண்டு வந்த சந்திரகிரி ஆளுகைக்கு உட்பட்ட தாமல் வேங்கடபதி நாயக்கனிடமிருந்து (சென்னப்ப நாயக்கனின் மகன்)  கடற்கரை மணல்வெளிப் பகுதியை வாங்கினார்.

போர்ச்சுக்கீசியர்களின் செல்வாக்கில் இருந்த சாந்தோமில் (மயிலாப்பூர்)  பாளையக்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு 1200 வராகன் வரிகட்ட ஒப்புக்கொண்டனர் "ஆங்கிலேயர்'. ஆண்ட்ரூ கோஹன் என்பவருடன் சேர்ந்து பண்டகச்சாலையின் கிடங்கை அமைத்து, தொடர்ந்து கோட்டையைக் கட்டினான் தென்னிந்திய ஆங்கிலேய சாம்ராஜ்யத்திற்கு இதுதான் அடித்தளமாக அமைந்தது.

கோட்டை கட்டப்பட்ட இடம் மதுரைசேனன் என்ற செம்படவத் தலைவனின் வாழைத் தோட்டம் ஒன்று இருந்தது. அதற்கு மேற்கே இருந்த இடம்தான் நரிமேடு என்ற மணற்குன்று.  மதுரை சேனனின் வாழைத் தோட்டம் உட்பட்ட பட்டினம் பிறமொழிக்காரர்களால் மதுரச் சேனபட்டணம், என்று வழங்கி இருக்கின்றனர். அது மதராசப் பட்டணம் - மதிரசா பட்டணம் என்றெல்லாம் மருவி மதராஸ் என்ற பெயர் வழக்கிற்கு வந்தது. ""மதுரை'' என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கியதால் "மெட்ராஸ்' என்ற பெயர் ஏற்பட்டது என்று வேறொரு நூலும் (நாமிருக்கும் நாடு) குறிப்பிடுகின்றது.

1666இல் முதல் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் ஜார்ஜ் வாக்ஸ் கிராவுட் என்பவராவார். எலிகு யேல் கவர்னராக (1687-1692) இருந்த காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநராக ஜோசைய்யா சைல்டு என்பவர் இருந்தார்.  அவர் கவர்னர் யேலின் தன்னிச்சையான நிர்வாகத்தை அடக்கவும், அதிகாரத்தைக் குறைக்கவும், நகராட்சி அமைக்கவேண்டும் என்ற கருத்தைப் பரிந்துரை செய்து 1687 செப்டம்பர் 28இல் கிழக்கிந்திய கம்பெனிக்குக் கடிதம் எழுதி இருந்தார்.  அதற்காக வழங்கப்பட்ட உரிமை சாசனத்தால் 1688 செப்டம்பர் 29இல் சென்னை நகராண்மைக்  கழகம் உருவானது.

            கோட்டையை உருவாக்கிய கிழக்கிந்திய வாணிகக் கம்பெனி மதிராசப்பட்டணத்தை, மேலாண்மை செய்ய முற்பட்டது.  1653இல் கோட்டை கட்டி முடிக்கப்படும் முன்னரே 1652இல் ஏஜண்ட் என்ற பெயரில் இருந்த கம்பெனி பணியாளர் பிரிசிடெண்ட் ஆக்கப்பட்டார்.  கோட்டையில் முதன் முதலில் கிறித்துவ தேவாலயம் கட்டப்பட்டது.  கவர்னர் சீரென்காம் மாஸ்டர் 1678ல் உருவாக்கினார். அவ்வழிபாட்டு இடத்திலேயே புதன்கிழமையும், சனிக்கிழமையுமாக நீதிமன்றம் செயல்பட்டது.  அதற்குப்பிறகு நிலவரி, சுகாதார வரிகள் விதிக்கப்பட்டன.

            1675இல் மக்களிடம், நிலம், வீடு ஆகியவற்றிற்கு வரி வாங்கலாம் என்ற கருத்தைத் தெரிவித்து 1675இல் இலண்டனில் இருந்து வந்த கடிதத்தை உடனடியாக அமுல் படுத்த முடியாமல் 1678இல் வீட்டுவரியை வசூலிக்கத் தொடங்கினர்.  அதற்காக நியமிக்கப்பட்டவர் பெயர் "ஸ்கேவன்ஜர்' என்பதாகும். சுகாதார வரிக்கு எதிர்ப்பு வரக்கூடாது என்பதற்காக வீட்டு வரி என்ற பெயரில் வாங்கிய அவர் மக்கள் வீடுகளின் பட்டியலையும் தயாரித்தார்.  அப்பட்டியலின்படி பிறகு கோட்டையின் சுவர்களைப் பழுதுபார்க்க வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வரி மூலம் வரும் வருவாயைப் பெருக்கி 500 ஐரோப்பியர்கள் வாழ்வதற்கு வேண்டிய செலவு பெறப்பட வேண்டும் என்று கம்பெனி கடிதம் அனுப்பிவிட்டது.

ஆங்கிலேய வணிகர்களுக்கும், இந்திய வணிகர்களுக்குமான தொடர்பில் ஏற்படும் வழக்குகளை விசாரிக்க இந்தியாவிலேயே நீதிமன்றம் ஏற்படுத்த இரண்டாம் சார்லஸ் மன்னரிடமிருந்து கம்பெனியார் ஆணை பெற்றனர். அதற்காகப் பம்பாய், மதராஸ் இரண்டு இடங்களிலும் "அட்மிரால்டி  நீதிமன்றம்'  ஏற்படுத்தப்பட்டன.

            ஏஜன்ட் என்பவர் பிரிசிடென்ட் (தலைவர்) ஆனபிறகு நீதிமன்றம் உருவாவதற்கு முன்பே நீதி வி­யங்களை விசாரித்தார்.  இதில் குழப்பங்கள் ஏற்பட்ட வகையில்தான் 1686 ஜூலை 10ஆம் தேதி அட்மிரால்டி நீதிமன்றம் அதிகாரத்திற்கு வந்தது. நீதி, வரி ஆகிய முறைகளில் அதிகாரத்தை ஆங்கிலேயர்கள் செலுத்தியிருந்தாலும், தக்காணத்தில் செல்வாக்குப் பெற்ற ஒளரங்கசீப் ஆட்சியால் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தனர்.  அவற்றை எதிர்கொள்ள ஆங்கில அரசின் படைபலத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஒரு அணுகுமுறையைக் கையாண்டனர்.  அதற்கான ஏற்பாட்டில் பம்பாயையும், சென்னையையும் "ரீஜென்சி' என ஆங்கிலேய அரசு அறிவித்தது. "ரீஜென்சி' என்றால் ஆங்கில அரசின் நேரடிப் பார்வையின் கீழ் வருவதாகும். "ரீஜென்சி' பகுதியைத் தாக்கினால் ஆங்கில அரசையே தாக்கியதாகும்.  இந்த முறையைக் கையாண்டவகையில் ஆங்கிலேயர்களின் சென்னைக் கோட்டை அதிகாரக் கோட்டையானது.

            இங்கிலாந்து, அயர்லாந்து பகுதிகளிலிருந்து 300 இராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.  தன்னிச்சையான கோல்கொண்டா, அரசுதன் கட்டுப்பாட்டில் இருந்த கோட்டையைச் சுற்றியுள்ள இடங்களுக்காகக் கம்பெனியிடம் இருந்து 1200 பகோடக்களை வாடகையாக பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டன.  தொடர்ந்து இங்கிலாந்து சக்கரவர்த்தியின் கம்பெனி மேலாண்மைக்கு அவ்விடங்கள் தரப்பட்டுவிட்டதாக அறிவிக்கச் சொல்லப்பட்டது.  இதைத் தொடர்ந்து மதராசா பட்டணத்தை ஆட்சி செய்ய எழுந்த வடிவம்தான் "கார்ப்பரே­ன்' என்ற அமைப்பு அதற்காக 1687 டிசம்பர் 30இல் ரீஜின்சி அதிகாரத்தில் கொடுக்கப்பட்ட ஆணையில் கூறப்பட்ட செய்தியாவன, ""நமது புனித ஜார்ஜ் கோட்டை கோரமண்டலக் கரையில் உள்ள சாதாரணமாகக் கிறிஸ்து ஊரான மதராசபட்டினம் என்றழைக்கப்படுவது. மதராசபட்டினம் கார்ப்பரே­ன் ஆகின்றது'' என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் கட்டப்பட்ட ஆங்கிலேயரின் கிறித்துவக் கோயிலைப் பிரதானப்படுத்தி அதன் மூலமாக ஓர் இடத்தை அங்கீகாரப்படுத்திக் கொள்ள ""கிறிஸ்து ஊரான மதராசப் பட்டணம்'' என்று சொல்லி அதைக் கார்பரே­ன் ஆக்கினார்கள்.

            எலிகு யேல் கவர்னராக இருந்தபோது நத்தேனியல் ஹிக்கன்ஸன் முதல் மேயராக அமைய 1688ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் நாள் இந்தியாவின் முதல் "நகராண்மைக் கழகம்' மதராசப் பட்டணத்தில் தொடங்கப்பட்டது.  கவர்னர் யேல் அவர்கள் அதிகாரத்தைக் குறைக்கும் உள்நோக்கத்துடன் பரிந்துரைக்கப்பட்ட நகராண்மை, அன்றைய சென்னை மாகாணத்தையே ஆளுவதற்குரிய தொடக்கமானது.

            சென்னப்ப நாயக்கனின் மகன் வேங்கட நாயக்கன் தன்னுடைய தந்தையின் பெயரில் இருந்த சென்னக்குப்பப் பகுதிகளான முத்தியாலுப் பேட்டை, பகடலு பேட்டை ஆகிய ஊர்களையும் ஆர்குப்பம், மேலுப்பட்டு (உப்பளப்பகுதி) ஆகிய பகுதிகளையும் வழங்கியுள்ளான் என்பதை மெக்கன்சியின் கைப்பிரதி கூறுகிறது.  எப்படியிருப்பினும் வேங்கட நாயக்கன் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரில் வழங்கப்பட்டிருந்த பெயரையும் மதராசப் பட்டணம் உள்வாங்கிக் கொண்டு சென்னைப் பட்டணம் என விளங்கியது.

            கம்பெனி மதராஸ் என்ற பெயரை நிலைநிறுத்தவும் முத்தியாலுப்பேட்டை பகுதியைச் சார்ந்த பகுதியினர் சென்னப் பட்டணம் என்ற பெயரை நிலைநிறுத்திடவும் இரண்டு பெயர்களுமே  வழக்கில் நிலைப்பட்டன.  இரண்டுமே ஆங்கில நிர்வாகத்தில் என்றாகிவிட்டதால் ஒரு இடப்பெயராகவே இரண்டு பெயர்களும் கருதப்பட்டன.

            பிரான்சிஸ் டேவிற்கு பிறகு தாமஸ் ஈவி என்பவர் டாக்டர் கிரின் ஹில், என்பவரை அனுப்பி வேங்கடனுக்குப் பின்வந்த சந்திரகிரிமன்னன் ரங்கராயனிடம் அனுப்பி புதிய ஒப்பந்தம் செய்து கொண்டான். அதனைத் தொடர்ந்து நரிமேடு என்ற இடத்திற்குத் தங்களின் ஆளுகையை ஆங்கிலேயர் விரிவுபடுத்துகின்றனர்.

            ஆங்கிலேயர் கட்டிய கோட்டைக்கு வெளியே இருந்த கறுப்பர் பட்டணத்தின் மேற்குப்பகுதி வேப்பேரி முதலான பகுதிகளைக் கம்பெனியின் ஏஜண்ட் (பிரிசிடெண்ட்) ஸ்பீரின்ஷாம் மாஸ்டர், 1678இல் குத்தகைக்குப்பெற முயற்சி செய்தார்.  கவர்னர் யேல் அவர்களும் அவ்வூர்களைப் பெற முயற்சி செய்தார். கடைசியாக 1693 பிப்ரவரி 10இல் முதல் மேயராக இருந்து கவர்னரான ஹிக்கின்சன் வசீர் ஆசாத் கானிடமிருந்து பிர்வானா என்ற ஆணையின் மூலம் தொண்டையார் பேட்டை (டோண்டூர்) புரசைவாக்கம் (பெப்சிவாக்கா) எழும்பூர் (எக்மோர்) ஆசிய இடங்களை மானியமாகப்  பெற்றார்.

            ஒளரங்கசீப் தளபதி வழி நவாப் வசீர் ஆசாத் கானிடம் மேலும் வேப்பேரியை மானியமாகக் கேட்டனர் ஆங்கிலேயர்.  அதற்கு ஈடாகப் பள்ளி வாசல் கட்டித்தருவதாக ஆசை காட்டினர்.  மேலும் பெரியமேட்டையும் கேட்டனர்.   ஆனால் வசீர் கான் தரவில்லை.

            1700இல் நவாப் தாவூத்கான், எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் தமது ஆட்கள் மூலம் கொள்ளையடித்தான்.  பிறகு பிணையத் தொகையாக 25000 ரூபாய் கொடுக்கப்பட்டபிறகு  அவை நிறுத்தப்பட்டன.

            கம்பெனி திருவல்லிக்கேணி, புரசைவாக்கம் ஆகியவற்றை ஒருவருக்கு 1300 வராகன் குத்தகைக்கு விட்டது. அவர் மறுத்தபிறகு வேறொருவருக்கு 1750 வராகனுக்கு (கி.பி. 1708)

12 ஆண்டு குத்தகைக்கு விட்டது.  இருந்தாலும் நவாப் தொல்லைப் படுத்தினான்.  பரிசுகளால் சமாதானம் அடையாத நவாப் 400 பாட்டில் மதுவிற்குச் சமாதானம் அடைந்தான். அதற்குப் பரிசாக பரங்கி மலையில் 46 ஏக்கர் நிலத்தையும் பரிசாக வழங்கினான். புரசைவாக்கத்தின் பயிர் நிலங்களில் செங்கல் சூளை வைத்தும், குத்தகை முடிந்த நிலங்களை வாரம் விட்டும் ஆங்கிலேயர் பயனை அனுபவித்தனர்.

            ஆர்க்காட்டு நவாப்பின் பகையால் கறுப்பர் பட்டணத்தில் தங்கியிருந்த நவாப் சப்தர் அலிகான் கொல்லப்பட்டபின், அவருடைய இளையமகனான மீர் ஆசாத் மீதும் குடும்பத்தினர் மீதும் கம்பெனி கவர்னர் பரிவு காட்டினார்.  அதற்காக மீர்ஆசாத் வேப்பேரி எர்ணாவூர், பெரம்பூர், புதுப்பாக்கம் ஆகிய ஊர்களை 1742இல் பரிசாகக் கொடுத்துவிட்டனர்.

            தொடர்ந்து சிறுசிறு போர் போன்ற கலவரங்களால் சில இடங்கள் கைமாறி வந்ததாலும் ஐதர்அலி கொள்ளையடித்து வந்ததாலும் கறுப்பர் பட்டணத்தைச் சுவர் எழுப்பித் தக்கவைத்தனர் ஆங்கிலேயர் எழும்பூரைக் குத்தகையிலிருந்து மீட்டு நெல்விவசாயம் செய்து பயனின்றி போனதால் மீண்டும் ஏலத்தில் குத்தகைக்கு விட்டனர்.  பிறகு எழும்பூரில் அரண்மனை (கி.பி. 1710) ஒன்றை அப்போதைய கவர்னர் பிரேசர் அமைத்தார். அதில் நோயுற்ற படைவீரர்கள் தங்கவைக்கப்பட்டனர். அதில் மாவாலை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.  திப்புசுல்தான் இறந்த பிறகு (கி.பி. 1799) அதன் அவசியமின்மை கருதி கி.பி. 1794இல் தொடங்கப் பெற்றிருந்த மனநல மருத்துவமனைக்கு அவ்வரண்மனை தரப்பட்டது. கி.பி. 1900ஆம் ஆண்டு மனநல மருத்துவமனை பூவிருந்தவல்லி சாலைக்கு மாற்றப்பட்டபிறகு இரயில்வே கம்பெனிக்கு விற்கப்பட்டது.

            சிறிது சிறிதாகக் சென்னை சூழ்ந்த இடங்களைக் கைப்பற்றிய கம்பெனி தன்னுடைய அதிகாரத்தை மேயர் நீதிமன்றம் மூலமும் நிலைநாட்ட முற்பட்டது. ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி 10 மைல் சுற்றளவில் சென்னை நகராட்சிக்குள் வருகின்ற கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தைத் தந்தது  மேயர் நீதிமன்றம். "மூன்று பகோடா' அளவில் தண்டனை விதித்தால் அதை மாற்ற முடியாது. அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யலாம். மேயர் நீதிமன்றம் 15 நாளைக்கு ஒருமுறை வழக்கை விசாரிக்கும்.  அதிகாரத்தை மையப்படுத்த தண்டனை தரும் இடமாக "நகராண்மைத் தலைவருக்கு' அதிகாரத்தைத் தந்து ஆதிக்கம் செலுத்தியது ஆங்கில நிர்வாகம், 1798க்குப் பிறகு வெளிப்படையாக ஆதிக்கக் கோலேச்சியது.  அதற்காக மேயர் நீதிமன்றத்தின் பணிகள் விரிவாக்கப்பட்டு சென்னை ஆவண நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது.  ஆங்கிலக் குடிமக்களுக்குச் சென்னையில் உள்ள இந்திய மக்கள்மீது நீதி செலுத்தி வரிவசூலித்து ஆதிக்கம் செலுத்தத்  தெளிவாக வழிமுறைகள் காணப்பட்டன.

            பெருநகர  சென்னை மாநகராட்சி யில் வழங்கப்பட்ட உரிமைப் பத்திரங்களில் முதல் பத்திரமாக, நமக்குக் கிடைப்பது ஆகஸ்டு 19, 1695இல் நத்தானியல் ஹிக்கின்ஸன் வழங்கிய பத்திரமாகும்.  நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றை ஜான் என்ற குமாஸ்தா கண்டு பிடித்திருக்கிறார், அதற்கு வழங்கப்பட்டதுதான் அந்த உரிமைப் பத்திரம் ""ஜான் கெளண்ட்ரி'' என்பவர் மதரசாபட்டினத்துவாசி. தான் மிகுந்த பிரயாசை எடுத்து, செலவும் செய்து, ஒரு கருவியைக் கண்டுபிடித்திருப்பதாக நமக்குத் தெரிவித்திருக்கிறார்.  அது இந்த ஊரின் நன்மைக்குச் செயல்படலாம் என்று தெரிவதால் இந்தக் கண்டுபிடிப்பு, அவருக்குச் சொந்தமானதென்றும், அதைத் தயாரிக்கும் உரிமையை அவருக்கே அளிக்குமாறும், அவர் கேட்டிருப்பதை அங்கீகரித்து, அந்த உரிமையை, நாங்கள் அவருக்கு ஏழு வருட காலத்துக்கு வழங்குகிறோம்'' என்று அறிவிக்கப்பட்டது. (நரசய்யா, மதராசபட்டினம்).

            இதைத் தவிர இந்த மனிதர், இன்னும் இரண்டு தனி வணிகர்களுடன் சேர்ந்து, குளிக்கும் தொட்டிகளையும் தயாரிக்க ஆரம்பித்தார்.  அவற்றைத் தயாரிக்கும் உரிமையையும் ஐந்து வருடங்களுக்கு வாங்கினார்.  அந்த உரிமையின் காரணமாக, அதைக் காட்டி மக்கள் அதைப் பயன்படுத்த ஒரு கட்டணமும் வசூலிக்க 1964 அக்டோபர் 22ல் அனுமதி தரப்பட்டது.

மதராசப் பட்டணத்தின் நீர்ப்பிரச்சனை

சென்னையின் நீர்ப் பிரச்சனை ஆங்கிலேயர் முதலிக் கோட்டை கட்டிய காலத்திலேயே இருந்ததுதான்.  உப்பு நீர் தான் கோட்டையைச் சுற்றி ஒருமைல் சுற்றளவில் கிடைத்திருக்கிறது. இதைச் சரிகட்ட பெத்தநாயக்கன் பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்திருக்கிறார்கள். பிரெஞ்சுப் போரின் போது பிரெஞ்சுக்காரர்கள் தண்ணீரை வெளியிலிருந்து கொண்டு போவதைத் தடுத்துள்ளனர்.  இதற்குப் பிறகுதான் பிரெஞ்சுகாரர்களிடமிருந்து கோட்டை மறுபடியும் ஆங்கிலேயர் கைக்கு வந்தபோது நீர்ப்பிரச்சனைக்குத் தீர்வுகாணப்பட்டது. நகர மேலாண்மையில் நகரத்தின் நீர்ப்பராமரிப்பு,  வடிகால் பராமரிப்பு ஆகியவற்றிற்குச் சட்டம் செய்யப்பட்டன.

            1772இல் கேப்டன் பேகர் என்பவர் வகுத்தத் திட்டத்தால் பெத்தநாயக்கன் பேட்டைக்கு வடக்கில் கிணறுகள் தோண்டப்பட்டன.  "ஏழு கிணறு அரசு தண்ணீர்த் திட்டம்" என்ற பெயரில்  தண்ணீர்த் திட்டம் தொடங்கப்பட்டது.  பத்துக் கிணறுகள் தோண்டப்பட்டன.  16 அடி விட்டம் 23-29 அடி ஆழமுள்ள பத்துக் கிணறுகள் தோண்டப்பட்டன.

            இப்படிக் காலங்காலமாக இருந்தத் தண்ணீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு காணப்பட்டத் திட்டங்களில் ஒன்றுதான் கடல் நீரைக் குடிநீராக்கும் மாற்றுத் திட்டம்.

            1792இல் வீட்டு வரியானது வீட்டு வாடகையில் ஆண்டு மதிப்பில் நூற்றுக்கு 5% வீதம் வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காலத்தில்தான் நகரத் தூய்மைப் பொறுப்பு கவனிப்பாளர் தண்டலாளர் ஆகியோரிடம் தரப்பட்டன. அவர்கள் குத்தகை ஒப்பந்த முறையில் மற்றவர்களிடம் அந்த வேலையை வாங்கினர். வரி வசூலிக்க, மது வகைளுக்கு அனுமதி தர வழக்குகளைத் தீர்த்து சமாதானம் செய்ய நகராண்மைக் கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. 1856இல் நகரத்திலுள்ள சில வகுப்பார் தாமே வரி வசூலித்துத்தம் பகுதி நிர்வாகத்தை நடத்த அனுமதி தரப்பட்டது. ஆனால் இதில் பயன் விளையவில்லை. 1856இல் கமி­னர்கள் நியமிக்கப்பட்டப் பிறகு நிலவரி அதிகமாக விதிக்கப்பட்டது.

            வீட்டுவரி 71/2 சதவீதமாக உயர்த்தப்பட்டது. வண்டிகளுக்கும் மாடுகளுக்கும் வரி விதிக்கப்பட்டது. இந்திய உறுப்பினர்களிலிருந்து கெளரவ உறுப்பினர்கள் நியமிக்க வழிவகை செய்யப்பட்டது. 1863இல் வர்த்தகவரி உத்தியோக வரி சுங்கவரி போன்ற வரிகள் போட வழிவகை செய்யப்பட்டது. நகராண்மையிடமிருந்த போலீஸ்  அரசாங்கத்திடம் சென்றுவிட்டது.

           

            1867இல் சென்னப் பட்டணம் 8 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொன்றுக்கும் 4 ஆணையாளர்கள் அரசாங்கத்தாலேயே நியமிக்கப்பட்டனர். இந்த ஆணையாளர்களின் கூட்டத்திற்குத் தலைமை வகித்து ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் திருத்த நிறைவேற்ற அதிகாரமுடைய நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். 1878இல் ஏற்படுத்தப்பட்ட சட்டம் 8 பகுதிகளை ஆள்வதற்கு நியமிக்கப்படும் 32 பேரில் 16 பேரை நியமனமாகவும் 16 பேரை வரி செலுத்துவோர் தேர்ந்தெடுப்பதாகவும் மாற்றினர். பிறகு 1892இல் மூன்று பதவிகள் ஏற்படுத்தப்பட்டன. நிலவரி அலுவலர், பொறியாளர், சுகாதார தனி அலுவலர் ஆகியன அப்பதவிகள், இக்காலத்தில் சாக்கடைத் திட்டத்திற்கான செலவை ஈடுகட்டுவதற்காக வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.

            1904இல் 32 பேர் நியமனத்தை அதிகப்படுத்தி 36 பேராக உயர்த்தப்பட்டனர். ஆணையாளர்கள் 8 பேர் வணிகச் சங்கம் முதலியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு நிரந்தரக் குழு நியமிக்கப்பட்டது.

50 கவுன்சிலர்களைக் (உறுப்பினர்) கொண்டு நகராண்மைக் கழகம் அமைக்கப்பட்டது.

30 வட்டங்கள் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு நகராட்சி உறுப்பினர் என 30 உறுப்பினர்களும் மற்ற 20 பேர் உறுப்பினர்கள் நியமன முறையிலும், தேர்ந்தெடுக்கப்பட்டனர். நான்கு நிரந்தரக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அவை வரி, நிதி, பொதுப் பணி, ஆரோக்கியம், கல்வி, ஆகியவற்றை நிர்வாகம் செய்தன.

            ஆணையாளர்களுக்குத் தலைமை ஏற்க தலைவர் என்ற பதவி ஏற்படுத்தப்பட்டது. அப்பதவி ""கமி­னர்'' என அழைக்கப்பட்டு நிர்வாகத்தின் அதிகாரம் தரப்பட்டது. கவுன்சில் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்தான் தலைவர் அவரே நகராண்மைக் கூட்டத்திற்கும் தலைமை வகித்தார். மேற்கண்ட சட்டம் நடைமுறைக்கு வந்தபோது தான் பெண்களுக்கு வாக்குரிமை தேர்தலில் நிற்கும் உரிமை ஆகியன கிடைத்தது.

            1882இல் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினராக இருந்தவர் சர்.பிட்டி தியாகராயச் செட்டியார். அவர் 1905இல் வேல்ஸ் இளவரசர் 5-ஆம் ஜார்ஜ் வந்தபோது வெள்ளுடை அணிந்து வரவேற்க அப்போதைய கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். வெள்ளுடை வேந்தரான தியாகராயர் 1909-12இல் சென்னை ஆளுநர் குழுவுக்கு அனுப்பப்படும் ஒரு நகரசபை உறுப்பினராகத் திகழ்ந்தவர் ஆவார்.

            1919இல் வந்த சட்டத்தால் நகராண்மைக் கழகத் தலைவராக முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சர்.பிட்டி. தியாகராயச் செட்டியார். 1919-1923 வரை அவர் தலைமைப் பதவியை வகித்தார். அவர் சென்னை மாகாண முதலமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு இருந்தும் அதை வேண்டாம் என்று உதறியவர். 1882-லிருந்து 1923 வரை சென்னை நகராண்மைக் கழகத்துடன் தொடர்புடையவர். தியாகராயச் செட்டியார் நகராண்மையில் 1081 கூட்டங்கள் நடத்தியுள்ளார்.

            அவர் காலத்தில் நடந்த 1081 கூட்டங்களில் ஒன்றிரண்டு தவிர அனைத்துக் கூட்டங்களிலும் கலந்துள்ளார்.  1920இல் மான்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தால் நகராண்மைத் தலைவருக்கு நடந்த நேரடித் தேர்தல் முறையால் வெற்றி பெற்ற முதல் தலைவரும் சர்.பிட்.டி. தியாகராயரே  ஆவார். மூன்று முறை நகராண்மைக் கழகத் தலைவராக இருந்த தியாகராயர் பதவிக் காலத்தின் இறுதியில் கூவத்தைச் சீராக்க வேண்டி ஆளுநரிடம் முறையிட்டிருந்தார். அதனால் தியாகராயர் இறந்த போது கூவம் சீரானால் அதற்குத் தியாகராயர் ஆறு என்ற பெயரை வைக்கலாம் என்று நகர மன்றத்தில் உறுப்பினர்கள்  தீர்மானம் நிறைவேற்றினர்.

            தியாகராயர் ""மக்கள் பூங்கா'' வையும் இராபின்சன் பூங்காவையும் நிறுவினார். அதன் பின் பெண்களுக்கென்று தனியாக ""பேரக்ஸ் னெய்டன்'' என்னும் இடத்தில் பூங்கா அமைத்தார்.

            முதன் முதலாக 1920இல் சென்னையில் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள நகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் தொடங்கினார். 1921இல் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்தார். இதற்கு முன்னரே தான் தொடங்கியிருந்த தன்னுடைய பள்ளியில் தன் சொந்த செலவில் ஏழைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கினார். நிர்வாக அதிகாரியான ஆணையாளர் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார்.

            1932-33இல் தலைவராக இருந்து கொண்டிருந்தவர் இ. ராஜா. சர். முத்தையா செட்டியார் அப்போது பொப்பிலி இராஜா மந்திரி சபை சென்னை மாகாணத்தை ஆண்டு கொண்டிருந்தது.

இராஜா. சர். அண்ணாமலை செட்டியார் மகன் குமார ராஜா (முத்தையா செட்டியார்) எழுப்பிய விவாதத்தால் திரும்பவும் மேயர் பதவி கொண்டுவரப்பட்டது. 1933 ஜனவரி 19-ஆம் தேதி அரசு அறிவிப்பின்படி ஜனவரி 26 முதல் புது முறை நடைமுறைக்கு வந்தது.  அப்போது, பொப்பிலி ராஜா இல்லாததால் சபைக்குத் தலைமை தாங்கிய திவான்பகதூர் எஸ். குமாரசாமி ரெட்டியார், செட்டிநாடு குமார ராஜா (எம்.ஏ. முத்தையா செட்டியார்) அவர்களை மேயராக மொழிந்தார். சிறந்த அணிவகுப்பு மரியாதையுடன் 1933 மார்ச்  7இல் குமார ராஜா மேயர் பதவியை ஏற்றார்.

            அப்போது வந்த ஆணையின் கீழ் ஐந்து பிரிவுகள் இருந்தன:

1. இது ""மெட்ராஸ் சிடி முனிசிபல் (அமெண்ட் மெண்ட்) ஆக்ட் 1933 என்றழைக்கப்படும்.

2. இதற்கு முன்னர் ஆணையில் எதற்கெல்லாம் "தலைவர்' என்றுள்ளதோ அதற்கெல்லாம் "மேயர்' என்று மாற்றப்படும்.

3. "கவுன்சில் தலைவர்' என்று குறிப்பிடப்பட்ட இடங்கள் மேயர் என்றாகும்.

4. ய­ட்யூலிலும் அவ்வாறே மாற்றங்கள் செய்யப்படும்.

5. 413வது செக்­ன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

            கோட்டைக்குள் இருந்த நகராண்மைக் கழகம் முத்தியாலுப்பேட்டை எர்ரபாலு செட்டித் தெருவில்   வாடகையில் இயங்கி வந்தது. பீப்பிள்ஸ் பூங்காவின் ஒரு பகுதியில் நகராண்மைக் கழகத்திற்குக் கட்டடம் கட்டப்பட்டது. அதைக் கட்டியவர் லோகநாத முதலியார் என்பவர். 71/2 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இதற்கு 51/2 இலட்சம் பணம் தரப்பட்டிருக்கிறது. 4 வருடங்களில் கட்டப்பட்ட அக்கட்டடத்திற்கு 1880-84இல் இந்திய அரசப்பிரதிநிதியாய் இருந்த ரிப்பன் பிரபுவின் பெயர் வைக்கப்பட்டது.

ரிப்பன் பிரபு தல சுய ஆட்சி முறையைக் (உள்ளூர் மக்களாட்சி முறை) கொண்டு வந்தவர். நகராண்மைக் கழகங்களுக்கு உறுப்பினர்களை மக்களால் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர்ந்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். அரசால் நியமிக்கப்படும் அதிகாரிகளைவிட தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்  அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பதை நடைமுறைக்குக் கொண்டு வந்தவர். அரசின் கட்டுப்பாடு உள்ளே செல்லாமல் வெளியே இருந்து கன்காணிக்க வேண்டும் என்று அமைத்தவர். சில்லரை வரிகளை வசூல் செய்து தொடக்கக் கல்விக் கூடங்கள், சாலைகள், விளக்குகள், குடிநீர், வழங்கல், பொது சுகாதாரம் ஆகியவற்றிற்குப் பயன்படுத்த அனுமதியை ஏற்படுத்தியவர். கிராமப்பகுதிகளிலும் இதை நடைமுறைப்படுத்தியவர். இவருடைய திட்டத்திற்குப் பிறகு தான் 1884இல் 32 கமி­னர்களில் 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் காரணமாக 1913இல் நகராண்மைக் கழக கட்டடத்திற்கு ரிப்பனின் பெயரை வைத்தது மட்டுமின்றி அவருடைய உருவச்சிலையையும் வைத்தனர்.

            1933இல் கொண்டுவரப்பட்ட சட்டம் நகரத்தை 40 வட்டங்களாகப் பிரித்தது. நகராண்மைக் கழக உறுப்பினர்கள் எண்ணிக்கை 60 ஆக உயர்த்தப்பட்டது. 60 உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு ஆடவரையும் ஒரு பெண்டிரையும் சேர்த்து 5 மூப்பர்களைத்தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்பட்டது. நகராட்சி உறுப்பினர்களிலிருந்து துணை நகர மேயர் பதவிக்குத் தேர்தல் நடத்தும் அதிகாரம் 1936இல் வழங்கப்பட்டது. துணை மேயர் பதவி ஏற்படுத்தப்பட்டது. அதன்மூலம் முதல் துணை மேயராக வந்தவர் திரு.எம்.  பக்தவச்சலம் ஆவார்.

            1948இல் சென்னை சார்ந்த பல இடங்களை இணைத்த வகையில் நகராட்சிச் சட்டம் மேலும் திருத்தப்பட்டது. நகரம் 50 வட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. 50 வட்டங்களுக்காக

50 உறுப்பினர்கள் மேலும் 31 உறுப்பினர்கள்  நகராண்மைக் கழகக் கூட்டத்திற்கு உரியவர்கள்.

1) தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து 5 உறுப்பினர்கள்

2) பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து 4 பெண் உறுப்பினர்கள்.

3) தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து 4 உறுப்பினர்கள்

4) வர்த்தக சங்கங்களிலிருந்து 8 உறுப்பினர்கள்.

5) சென்னைத் துறைமுகம் சார்பாக ஒருவர்.

6) பல்கலைக்கழகம் சார்பாக ஒருவர்.

7) மூப்பர்கள் 5 பேர்

8) சிறப்பு நகராட்சி உறுப்பினர்கள் 3 பேர்               ஆக மொத்த உறுப்பினர்கள் 81 பேர்.

            1959இல் 100 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் திராவிட முன்னேற்றக் கழகம் நகர் மன்ற கட்சி, பெரும்பான்மை பெற்று நகரத் தந்தையாக திரு. அ.பொ.அரசு பொறுப்பேற்றார். துணை மேயராக திரு.பி. சிவசங்கரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 120 வட்டங்கள் பிரிக்கப்பட்டன. இடையில் ஒரு தடவை திரு. ஆர். சிவசங்கரமேத்தா அவர்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகரத் தந்தையாக ஆனார். திரு.டி.மணிவண்ணன் துணை மேயராக ஆனார். அடுத்து தி.மு.க. சார்பிலே நகராட்சி நடத்தப்பட்டு வந்தது. திரு.என். ஜீவரத்தினம் தி.மு.க நகர மன்றக் கட்சித் தலைவராகவும் பின்னர் திரு. வி. முனுசாமி தலைவராகவும் பல ஆண்டு காலம் திறம்பட நடத்தி வந்தார்கள். இவர்கள் நிர்வாகத்தில் முன்பை விட நகர வருவாய் பெருகியும் நகரம் பல துறைகளில் வளர்ச்சியுற்றும் விளங்கியது. முதலில் டாக்டர் பி. சீனிவாசனும் பிறகு எஸ்.ஜி. வினாயகமூர்த்தியும் திரு.கே. குப்புசாமியும் நகர மன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார்கள்.

தூய்மை நகராண்மை

            சென்னை நகராண்மைக் கழகத்தில் 1870-80 கால அளவில் எழுத்தராக வேலை பார்த்தவர் சைவ சித்தாந்த சண்ட மாருதம் சோமசுந்தர நாயக்கர் அவர்கள். இவர் மறைமலை அடிகளாரின் ஆசிரியர். மறைமலை அடிகள் தமிழில் எழுதுவதற்குக் காரணமாக இருந்தவர் இவர், நகராண்மைக் கழகத்தில் அவர் வேலை செய்த காலத்தில் பொய் சொல்லி விடுமுறை கேட்க மாட்டேன் என்று வேலையை விட்டுவிட்டார். இவர் வேலை பார்த்த காலத்தில் சுந்தரமூர்த்தி சுவாமி என்று வேலை பார்த்த ஒருவர் கடிதம் பெற வந்திருந்தார். ""சுவாமி'' என்ற சொல்லை எடுத்துவிட்டு வேறு சொல்லைச் சேர்த்துக்கொண்டு வந்தால்தான் கடிதம் தருவேன் என்று சோமசுந்தர நாயகர் கூறிவிட்டார். கடிதம் பெற வந்தவர் துரையிடம் முறையிட்டார். துரை அவர்கள் நாயகரை அழைத்து விசாரித்த போது ""கர்த்தர் ஏசு'' என்று பெயர் வைத்துக் கொண்டால் நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா என்று மறு மொழி கூறினார். அதை துரையும் ஏற்றுக் கொண்டு செயல்பட்டார்.

சிறப்பு நடைமுறைகள்

            சென்னை நகராண்மைக் கழகத்திற்குத் தனி கட்டடம் கட்டப்பட்டது போல தனி நடைமுறைகள் பல உண்டு.

            வெள்ளி முலாம் பூசப்பட்ட இரண்டு கோல்களை மேயருக்கு முன்னால் எடுத்துச் செல்ல, இரண்டு ""இங்கிலாந்தில் பிறந்த'' சார்ஜண்ட்டுகள் நியமிக்கப்பட்டனர். சிவப்பு மேலாடைகள் (உடைகள்) மேயருக்கும் ஆல்டர் மேன்களுக்கும் தரப்பட்டன. ராஜகுடைகளும் தரப்பட்டன. இங்கிலாந்திலிருந்து வந்த இந்த கோல்கள் மற்றும் கத்தி முதலியவை, பிரெஞ்சுக்காரர்களின் படையயடுப்பின்போது அவர்களால் சூறையாடப்பட்டன.

            1753இல் அதிகாரப்பூர்வமான அடையாளப் பொருட்கள் மீட்கப்பட்டன. பிரெஞ்சுக் காலத்தில் சென்னையிலிருந்து கடலூர் செயின்ட் டேவிட் கோட்டைக்குச் சென்றனர். ஐரோப்பாவில் நடந்த ஆங்கில - பிரெஞ்சு ஒப்பந்தத்திற்குப் பிறகு 1749இல் சென்னைக் கோட்டையைப் பெற்றாலும் மூன்றாண்டுகள் டேவிட் கோட்டையிலேயே ஆங்கிலேயர் இருந்தனர். அப்போது சத்திர மன்றம் திருத்தி அமைக்கப்பட்டது. பிரெஞ்சுக்கு உதவி செய்த ஆர்மெனியர், கத்தோலிக்கர்களை, வெளியேற்றி பிராட்டெஸ்டெண்டுவர்த்தகர்களுக்கு விற்றனர்.

            ஆங்கிலக் கம்பெனிக்கும் நகர மன்றத்திற்கும் இருந்த பிணக்கினால் இந்தியர்களின் வழக்கைத் தீர்க்க ஏற்படுத்தப்பட்ட மன்றம் "ரிகார்டர்' கோர்ட்டு இது ஹோபர்ட்டு காலத்தில் நடந்தது. அப்போது சென்னை நகர மன்றமும் இக்கோர்ட்டுடன் இணைக்கப்பட்டது. இதிலிருந்த "ரிக்கார்டர்' எனப்படும் வழக்குப் பதிவாளர் அதற்குத் தலைவராக்கப்பட்டார். சென்னை நகரம் 19-ஆம் நூற்றாண்டில் சென்னை மாகாணமாக விரிவானபோது நகராட்சியின் மீதான பொறுப்பு ஆங்கிலக் கம்பெனிக்குக்  குறைந்துவிட்டது.

            1639இல் பிரான்சிஸ் டே அடித்தளமிட்ட ஆங்கில வணிக முயற்சி 1688-ல் நகர ஆளுமையாக உருவாகியது. அதனுடைய எல்லை விரிந்து மாவட்டங்கள் பலவாக இணைக்கப்பட்டு சர். தாமஸ் மன்றோ காலத்தில் (1820-1827) மாகாணமாக தென்னிந்திய பிரிட்டிஷ் ஆளுகைப் பெரும் பரப்பிடமாகப் பேருருவம் கொண்டது.

            1881-86இல் ஆட்சி செய்த கிரான்ட் டப்  என்பவர் கோடைக்காலத்தில் சென்னை வசதியுள்ள இடமாக இருப்பதைக் கண்டு மெரினா கடற்கரையை அழகாக்கினார். "ஐரோப்பியக் கணவனும் மனைவியும், காதலனும் காதலியும் நெஞ்சோடு நெஞ்சம் கலந்து, கையோடு கைகோத்துச் செல்லும் காதலர் பாதை மிகவும் புகழ் பெற்றதாகும்'.  இப்போது ஆயிரக்கணக்கான, மக்கள் மாலை வேளையில் காற்று வாங்க இங்கு திரள்கிறார்கள் (மா.சு. சம்பந்தன் - பெருநகர  சென்னை மாநகராட்சி ). இது இப்போது சென்னை மெரினா கடற்கரைப் பூங்காக்களோடு அழகுற பெருநகர  சென்னை மாநகராட்சி யால் ஆக்கம்பெற்று வருகிறது.

            சென்னை நகராண்மைச் நீர்த்திட்டதிற்காக 1872இல் 42 அங்குல விட்ட கான்கிரீட் குழாய்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.  கீழ்ப்பாக்கத்தில் இருந்த கன்ட்ரோல் வால்வு மூலம் நீர் விநியோகிக்கப்பட்டது. சில இடங்களுக்கு 36 அங்குலக் குழாய் வழியாகவும், ஜார்ஜ் டவுனுக்கு 26 அங்குலக் குழாய் வழியாகவும் நீர் விநியோகிக்கப்பட்டிருக்கிறது.  30 மைல் நீள அளவில் குழாய்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

            வெள்ளுடை வேந்தர் தியாகராசர் செட்டியார் மேயராக இருந்த போது இறுதிக் காலத்தில் கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டத்தை முன் மொழிந்திருக்கிறார். கிழக்கிந்தியத் தீவுகளின் நகராட்சியை ஒட்டி அமைக்கப்பட்ட சென்னை நகராண்மைக் கழகத்திற்கு நகர மண்டபம் ஒன்று முதலில் ஏற்படுத்தப்பட்டது.

            முதல் நகரத் தந்தையாக இருந்த நத்தானியல் ஹிஸ்கின்சன் ஆறு மாதத்திற்குப் பிறகு ஆளுநராக ஆனார். கோட்டையில் கட்டப்பட்டிருந்த நகராண்மைக் கழகத்திற்கு உரிய நகர மண்டபத்தைக் கட்டிய வகையில் ரூபாய் நான்காயிரம் வராகன் கடன்  ஏற்பட்டது.  இதனால் ஆங்கில அரசு நகராண்மைக் கழகத்தின் வரவு செலவுக் கணக்கைக் கேட்டது.  1711-17இல் ஆரிசன் காலத்தில் மரப் பாலங்களுக்குப் பதிலாகக் கட்டப்பட்ட பாலம் கோட்டையிலிருந்து வடக்கு ஆற்றைக் கடந்து ஐலேண்டு பகுதிக்குச் செல்ல கட்டப்பட்ட பாலம் (1715) ஆகும்.

            மர்மலாங் பாலம் (மாம்பலம்), சைதாப்பேட்டையையும் கிண்டியையும் பிரிக்கும் இடத்தில் கட்டப்பட்டது. ஆர்மேனியனான (யூதன்) கோஜா பெட்ரஸ் உஸ்கன் என்பவன் சொந்த செலவில் அந்தப் பாலத்தைக் கட்டினான்.

            மக்கரே காலத்தில் நகராண்மைக் கழகம் திருத்தியமைக்கப்பட்டது. மக்களைக் கீழ்ப்படிய வைக்கின்ற நீதிமுறையில் அவருயை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மாஸ்டர் அதிகாரத்தில் இரவில் நகரக் காவலும் மேற்கொள்ளப்பட்டது. வில்லியம் கிபோர்டு ஆட்சிக் காலத்தில் கருப்பர் பட்டண ஊர்க் காவல் நிர்வாகம் திருத்தியமைக்கப்பட்டது. ஊர்க்காவல் தலைவனான பெத்தனாயக்கன் மதிப்பு உயர்த்தப்பட்டது.

            மக்கரே காலத்தில் பெளனி (106 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் 17 குழந்தைகளைப் பெற்றவர்) என்ற கேப்டன் மேயராகப் பதிவு ஏற்றார். 1727- ஜுலையில் நகராண்மைக் கழகம் திருத்தியமைக்கப்பட்டது. அதற்கு முன்பு ஒரு மேயர், 12 ஆல்டர்மேன்கள் (மூப்பர்),

60 அங்கத்தினர்கள் நியமிக்கப்பட்ட நிர்வாகம் இருந்தது.  1726இல் முதலாம் ஜார்ஜ் மன்னர் வழங்கிய அதிகாரம் சென்னை நகராண்மைக்கு 1727 - ஜுலையில் கிடைத்தது.  மேயருடன் 9 ஆல்டர்மேன்கள் நியமிக்கப்பட்டனர்.  அதில் ஏழு பேர் ஆங்கிலேயர்களாக இருக்க வேண்டும்.  டிசம்பர் மாதத்தில் மேயர் ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்.  1727 ஆகஸ்டு 16இல் புதிய குழு ஆட்சிக்கு வந்தது.  இப்போது பதவி ஏற்றவர் ரிச்சர்டு ஹிக்கின்சன்.  இவர் முதல் மேயரான நத்தானியல் ஹிக்கின்ஸன் மகன். அவனுடைய பதவி ஏற்பு கோலாகலமாக நடந்தது.  குதிரை மேலேறி பாண்டு வாத்தியம் முழங்க மகளிர் ஆடிய நாட்டியத்தோடு கோட்டையின் மைதானத்திலிருந்து ஊர்வலமாகச் சென்றுள்ளனர்.

            பெளனியின் காலத்தில் இருந்த ளீலிற்rமி எல்லா சிவில் வழக்குகளையும் விசாரித்தது.  அக்காலத்தில் அதிகார மொழியாகத் தெலுங்கு மொழியே பயன்படுத்தப்பட்டது.  அதனால் தெலுங்கர்களுடன் தமிழர்களும் "ஜெண்டு' என்று அழைக்கப்பட்டனர்.  இங்குள்ள மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வழக்குகளில் பாரம்பரிய முறையே மேற்கொள்ளப்பட்டது.  இவர்களுடைய நடைமுறையை மீறவோ குறுக்கிடவோ கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆகஸ்டு 13இல் நடைமுறைக்கு வந்த உரிமையால் நகராண்மைப் பதவி ஏற்படுத்தப்பட்டது. இவர் தான் எல்லா ஒழுங்கு முறைகளையும் வகுத்துக் கொடுத்தவராக இருந்துள்ளார்.  கவுன்சிலின் கடைசி அங்கத்தினராக இருந்தவர் செரிப் ஆக நியமிக்கப்பட்டார்.  அதற்குப் பின் வந்த செரிப்புகள் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள்.

            இதற்குப் பிறகு 1746-லிருந்து 49 வரை பிரெஞ்சுக்காரர்கள் வசம் சென்னை ஆட்சி இருந்தது.  அதற்குப்பிறகு 1753இல் நகராண்மை புத்துயிர் பெற்றது. 1753 ஜனவரி 8இல் உரிமை அளிக்கப்பட்டது.  ராபர்ட் கிளைவ் ஆல்டர்மேனாக வந்தார்.  ஏழுபேர் ஆங்கிலேயராக இருக்க மற்ற இருவர் வேறு நாட்டுப் பிராடஸ்டன்டுகளாக இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டது. இந்த முறை 1798 வரை அமுலில் இருந்தது.  1801இல் இது தள்ளுபடி செய்யப்பட்டது.

            1755இல் சென்னையின் நில அளவைப் படம் வரையப்பட்டிருக்கிறது.  1797இல் ஹைதர் அலி சாந்தோம் பகுதியைக் கொள்ளையடித்தான்.  அண்டைப் பகுதிகளைத் தீயிலிட்டான்.  இந்தத் தொல்லைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள புதிய கறுப்பர் பட்டணத்தில் மதில் சுவர் எழுப்பினர். "ஒற்றைவாடை' எனப்பட்ட அம்மதில் 31/2 மைல் நீளத்தில் கோட்டைக்கு வடக்கிலிருந்து மேற்காகக் கட்டப்பட்டது.  இதற்காகவும் கோட்டை பராமரிப்பிற்காகவும் வரி வசூலிக்கப்பட்டிருக்கின்றது.

            1856இல் ஏற்படுத்தப்பட்ட ஆணையின்படி மேயர் முறை நீக்கப்பட்டு கமி­னர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. நீதிபதிகள் நீக்கப்பட்டு 3 கமி­னர்கள் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் சம்பளம் பெற்று ஊழியம் செய்தார்கள். அவர்கள் வரிவசூலித்தல், நகர சுத்தம், பாதுகாப்பு ஆகியவற்றிற்குப்  பொறுப்பேற்றார்கள்.

            1860 முதல் சென்னை நகராண்மைக் கழகத்தின் கண்காணிப்பில் மக்கள் பூங்காவில் உயிர்காட்சிச் சாலை (200)  இயங்கியது.

            1904இல் சென்னை மின்சார டிராம் வண்டி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.

            இதனைத் தொடர்ந்து, 1906இல்  சென்னை மின்சார விடுமுதல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதுவே சென்னை நகராண்மைக்கும் அரசாங்கத்திற்கும் டிராம் வண்டிகளுக்கும், இரயில் நிலையங்களுக்கும் மின்சாரத்தைத் தந்தது.

            நிரந்தரக் குழுக்களுக்குப் பதிலாக வட்டக்குழு, மத்தியக் குழு கணக்குக் குழு ஒப்பந்தக்குழு உரிமம் மேல் முறையீட்டுக் குழு  போன்றவை அமைக்கப்பட்டன. 10 கோட்ட உறுப்பினர்கள் சேர்ந்தது ஒரு வட்டக் குழு. ஒவ்வொரு வட்டக் குழுவிற்கும் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒரு மத்திய குழு உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்படுவார். தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் இல்லாததுபோது வட்டக் குழுவில் ஒருவர் சேர்த்துக் கொள்ளப்படுவார்.

            இப்படித் தொடங்கிய குழு விரிவாக்கம் தற்போது 10 மண்டலங்களின் கீழ் 155 வார்டுகளைக் கொண்டதாக இருக்கிறது. வரி விதிப்பு மற்றும் நிதி, பணிகள், நகரமைப்பு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், கணக்குகள் மற்றும் தணிக்கைக் கல்வி என 6 நிலைக்குழுக்கள் உள்ளன. பெருநகர  சென்னை மாநகராட்சி கலைக்கப்பட்ட போது  நிர்வகிக்க நியமிக்கப்பட்ட ஒரு தனி அலுவலரின் மேற்பார்வையின்கீழ் மாநகராட்சி  இயங்கியது.

            பெருநகர  சென்னை மாநகராட்சி யில்தான் இந்தியாவில் முதன் முதலில் ஒளிபரப்பு நிலையம் அமைக்கப்பட்டது. சென்னை மாநகர்தான் மற்ற இந்திய நகரங்களை விட சொந்தமாக வாழ்விடங்களைக் கொண்ட நகரமாக விளங்குகிறது.

            இந்திய நாகரிக ஓட்டத்தில் தமிழ்ப்பண்பாட்டால் தலைநிமிர்ந்து இன்றும் நிற்கும் மாநகரம் தான் சென்னை.

தலைநகரைக் காப்பாற்றிய பெருநகர  சென்னை மாநகராட்சி

            ஆந்திரத்தைத் தனி  மாநில அரசாக ஆக்கவேண்டும் என்று கோரிய ஆந்திரர்களுக்கு ஆதரவாக வாஞ்சு கமி­ன் சென்னை நகரம் ஆந்திரம் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஒரே தலைநகராக அமையலாம் என சிபாரிசு செய்தது. இதை ஏற்று மைய அரசின் அமைச்சரவையும் முடிவெடுத்து விட்ட செய்தி பத்திரிகைகளில் வெளியாயின.

            அதன் பின் 3.1.1953இல் மாநகராட்சிக் கூட்டம் மேயர் திரு. த. செங்கல்வராயன் தலைமையில் கூடியது. அவ்விவாதத்தில் பங்கெடுத்த ம.பொ.சி. அவர்கள் ""தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்'' என்று கூறி "அவை உறுப்பினர்களின்' ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேறச்செய்தார். உடன் அது அன்றைய பிரதமர் நேருவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பெருநகர  சென்னை மாநகராட்சி யின் தீர்மானத்தால் நிலைமை அறிந்த நேரு அவர்கள் திட்டத்தைக் கைவிட்டார். அவர் ""சென்னை மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பாகிய மாநகராட்சியின் முடிவுதான் என்னை மனமாற்றம் அடையச் செய்தது'' என்று பின்னாளில் கூறியுள்ளது அதை உறுதிப்படுத்துகிறது.

மாநகராட்சிக் கொடி

            பெருநகர  சென்னை மாநகராட்சி க்கென்று தனிச் சட்டம் இயற்றப்பட்டது போன்று தனிக்கொடியும் நடைமுறையில் உள்ளது.  தொடக்ககாலத்தில் அக்கொடியில் இரண்டு மீன்கள், படகு ஆகியன இடம் பெற்றிருந்தன.  பழைய கொடியில் இரண்டு மீன்கள் இருந்ததால் அவற்றுடன் புலியும், வில்லும் சேர்த்து புதிய பெருநகர  சென்னை மாநகராட்சி க் கொடி 1948இல் உருவாக்கப்பட்டது.

            மாநகராட்சிக் கொடி ரிப்பன்கட்டடத்தின்மீது ஏற்றப்படும்போது தேசியக்கொடியுடன் இணையாக பறக்கவிடப்படும். மேயர் பயன்படுத்தும் வாகனத்தின் முகப்பிலும் பயன்படுத்தப் பட்டும்வருகிறது.

மேயர் நிர்வாகம்

            1973க்கு முன்னர் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிலிருந்து ஆண்டிற்கு ஒருமுறை மேயரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

            1.12.1973 முதல் பெருநகர  சென்னை மாநகராட்சி க்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுகைக் குழு இல்லாமல், தனி அலுவலர்களின் மேற்பார்வையில் 1996 அக்டோபர் வரை, (23 ஆண்டுகள்) செயல்பட்டு வந்தது. மாநகராட்சி ஆணையாளரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தது. 1974ஆம் ஆண்டுவரை சென்னை நகரின் வளர்ச்சிக்கான திட்டமிடல் பணியைச் பெருநகர  சென்னை மாநகராட்சி யே செய்து வந்தது. 1974க்கும் பின்னர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் செய்து வருகிறது.

            1996க்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர் காலம் ஐந்து ஆண்டுகளாக மாற்றியமைக்கப்பட்டது. மேலும் மேயர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் முறை நடைமுறையில் உள்ளது. 1988ஆம் ஆண்டு முதல் பெருநகர  சென்னை மாநகராட்சி 10 மண்டலங்களின் கீழ் 155 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.